பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதை தான் அடிப்படை: பிரதமர் மோடி
பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதை தான் அடிப்படை: பிரதமர் மோடி
UPDATED : நவ 28, 2025 04:09 PM
ADDED : நவ 28, 2025 03:43 PM

புதுடில்லி: '' பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதை தான் அடிப்படை '' என உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி கூறினார்.


தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
வழிகாட்டி
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே, உடுப்பி புதிய மாதிரியை முன்வைத்தது. இது தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. உடுப்பி தேசிய கொள்கைகளுக்கும் வழிகாட்டியது. குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு. பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும்.

புதிய மாதிரி
இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாக திகழ்கிறது. 1968 ம் ஆண்டில் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றும் நிகழ்வை ஸ்ரீவிஸ்வேசே தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார்.

சுதர்சன சக்கர இயக்கம்
செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை நான் அறிவித்தேன். இந்த திட்டம் என்பது, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும். எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும்.
ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



