சொன்ன தேதிக்கு முன்பே சரணடையும் 3 மாநில மாவோயிஸ்டுகள்
சொன்ன தேதிக்கு முன்பே சரணடையும் 3 மாநில மாவோயிஸ்டுகள்
ADDED : நவ 28, 2025 02:27 PM

மும்பை: மஹாராஷ்டிரா உட்பட மூன்று மாநிலங்களில் செயல்படும் மாவோயிஸ்டுகள், 2026ம் ஆண்டு ஜன.,1ம் தேதி ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஒட்டுமொத்தமாக சரணடைய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு வரும் ஆண்டு ( 2026) மார்ச்சுக்குள் மாவோயிஸ்டுகளை ஒழித்துவிடுவோம் என்று கூறி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாவோயிஸ்டு படையினர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வப்போது, சரணடைதலும் நடந்து வருகின்றன.
அண்மையில் மாவோயிஸ்டுகள் சார்பில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய விரும்புவதாகவும், பிப்ரவரி 15, 2026 வரை கால அவகாசம் வேண்டும் என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், 2026ம் ஆண்டு ஜன.,1ம் தேதி ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஒட்டுமொத்தமாக சரணடைய இருப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மண்டல தலைவர் அனந்த் என்ற பெயரில் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர்கள் மல்லோஜுலா மற்றும் அஷன்னா ஆகியோர் சரணடைந்தது, டாப் கமாண்டர் ஹித்மா கொல்லப்பட்டது உள்ளிட்டவற்றால் மவோயிஸ்டுகள் அமைப்பு பலவீனமடைந்து விட்டது. இந்த சூழலில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், எஞ்சிய மாவோயிஸ்டுகள் சரணடைய முடிவு செய்துள்ளோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

