இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒடிசா சட்டசபையில் அமளி
இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒடிசா சட்டசபையில் அமளி
ADDED : ஆக 25, 2024 12:52 AM
புவனேஸ்வர்,
ஒடிசாவில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது.
மக்கள் தொகை
இந்நிலையில், ஒடிசாவில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர எஸ்.டி., - எஸ்.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக காங்கிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.
இது குறித்து அக்கட்சியின் சட்டசபை தலைவர் ராம சந்திர கடம் கூறியதாவது:
ஒடிசாவில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகத்தின் மக்கள்தொகை 38.75 சதவீதமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அதேபோல், 50 சதவீதம் உள்ள ஓ.பி.சி., பிரிவினருக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லை. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீடு பெற அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் தொகையில், 6 சதவீதமாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
வாக்குவாதம்
முறையற்ற இட ஒதுக்கீட்டால் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., சமூக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடை வழங்கி, மருத்துவ படிப்புக்கான புதிய சேர்க்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஆதரித்து, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ., அருண்குமார் பேசினார். அப்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., தங்கதர் திரிபாதி, “இவ்வளவு நாட்களாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம், இந்த விவகாரத்தில் என்ன செய்தது?” என, கேள்வி எழுப்பினார்.
இதனால், சட்டசபையில் மூன்று கட்சி எம்.எல்.ஏ.,க்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சியினர் சபாநாயகரை முற்றுகையிட முயன்றதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக, கள்ளச்சாராய விவகாரத்தை கூறி சபை நடவடிக்கைகளை முடக்க முயன்ற எதிர்க்கட்சியினர், நேற்று இட ஒதுக்கீடு பிரச்னையை முன்னெடுத்து அமளியில் ஈடுபட்டனர்.