ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல்
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல்
ADDED : அக் 17, 2025 03:26 PM

புதுடில்லி: அசாமில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அசாமில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய கவுகாத்தியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பிராந்திய இயக்குநர் மயிஸ்நாம் ரிதன்குமார் சிங் என்பவரை கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். லஞ்சம் கொடுத்த மோகன்லால் ஜெயின் என்ற நிறுவனத்தின் வினோத் குமார் ஜெயின் என்பவரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ரிதன்குமார் சிங்குக்கு சொந்தமாக கவுகாத்தி, உ.பி.,யின் காசியாபாத், மணிப்பூரின் இம்பால் நகரில் உள்ள வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.2.62 கோடி ரொக்கம், டில்லி என்சிஆர், கர்நாடகாவின் பெங்களூரு, கவுகாத்தியில் அசையா சொத்தில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், 2 பிளாட்களுக்கான ஆவணங்கள், இம்பாலில் விவசாய நிலத்திற்கான ஆவணம், சொகுசு காரில் முதலீடு செய்ததற்கான ஆவணம், பல லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு வாட்சுகள் மற்றும் 100 கிராம் வெள்ளிக் கட்டி ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.