முதல் மனைவியை தீர்த்து கட்டியது அம்பலம்: 2வது மனைவி கொலையில் கைதானவர் 'திடுக்'
முதல் மனைவியை தீர்த்து கட்டியது அம்பலம்: 2வது மனைவி கொலையில் கைதானவர் 'திடுக்'
ADDED : ஆக 30, 2024 11:49 PM

ராம்நகர்:
தன் இரண்டாவது மனைவியை கொன்ற வழக்கில் கைதான தொழிலாளி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியானது. முதல் மனைவியையும் கொன்று உடலை எரித்து, வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாக கதை கட்டியது அம்பலமானது.
ராம்நகர் மாகடி ஹூஜகல் கிராமத்தை சேர்ந்தவர் கிரண், 37. இவரது முதல் மனைவி பூஜா, 28. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமானார். வேறு ஒருவருடன் ஓடி விட்டதாக, பக்கத்து வீடுகளில் வசிப்போரிடம் கிரண் கூறி இருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திவ்யா, 31 என்பவரை, கிரண் இரண்டாவது திருமணம் செய்தார். கடந்த 12ம் தேதி குடும்ப தகராறில் திவ்யாவை, கிரண் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவரை, மாகடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், முதல் மனைவி குறித்து கிரணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாகவும், அது பற்றி போலீசில் புகார் செய்ததாகவும் கூறினார். விசாரித்ததில், மனைவி ஓடி போனது பற்றி கிரண் போலீசில் புகார் செய்யவில்லை என்பது தெரிந்தது.
பூஜாவின் தாய் கவுரம்மாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 'என் மகளை ஐந்து ஆண்டுகளாக காணவில்லை. கிரண் என்ன செய்தார் என்று தெரியவில்லை' என கூறியிருந்தார். இதையடுத்து, கிரணிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முதல் மனைவியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
'எனக்கும், என் முதல் மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை கொலை செய்து உடலை, ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் புதைத்தேன்.
போலீசில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில், உடலை தோண்டி எடுத்து வந்து எனது தோட்டத்தில் புதைத்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பூஜாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்த்தேன். எலும்பு கூடுகள் இருந்தன. அதையும் வெளியே எடுத்து எரித்தேன்.
பின், எரிக்கப்பட்ட எலும்பு கூடுகளை மீண்டும் புதைத்து வைத்தேன்' என்று போலீசாரிடம், கிரண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் பூஜாவின் உடல் புதைக்கப்பட்ட இடம், தாசில்தார் சரத்குமார் முன்னிலையில் தோண்டப்பட்டது. அங்கு கிடைத்த எலும்பு துாள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.