ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதியம் பாக்கியில்லை: அமைச்சர்
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதியம் பாக்கியில்லை: அமைச்சர்
ADDED : நவ 14, 2024 11:55 PM
பெங்களூரு ; ''ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, அரசு ஊதிய பாக்கி வைக்கவில்லை,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய ஊதியத்தை, காலா காலத்துக்கு சரியாக, அரசு வழங்குகிறது. ஓட்டுனர்களுக்கு ஊதிய பாக்கி வைக்க கூடாது என, ஆம்புலன்ஸ்களை நிர்வகிக்கும் ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட், செப்டம்பர் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத ஊதியத்தை வழங்கவும், ஏற்பாடு நடக்கிறது. விரைவில் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக், அரை, குறை தகவல்களை தெரிந்து கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்துகிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவராக, உண்மையை புரிந்து கொண்டு பேச வேண்டும்.
ஆம்புலன்ஸ் பிரச்னை ஏற்பட்டதே, பா.ஜ., அரசில்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், மத்தியஸ்தம் வகித்து, ஏஜென்சி, ஓட்டுனர் இடையிலான பிரச்னைக்கு தீர்வு கண்டது.
மாநில அரசுக்கு பொருளாதார பிரச்னை இல்லை. இம்முறை பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு 260.33 கோடி ரூபாய் ஒதுக்கியது.
ஆம்புலன்ஸ் நிர்வகிப்பு ஏஜென்சி மற்றும் சுகாதாரத்துறை இடையே, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஏஜென்சிக்கு 162.40 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.