வாக்குறுதி திட்டங்களில் திருத்தம்? அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு!
வாக்குறுதி திட்டங்களில் திருத்தம்? அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு!
ADDED : ஆக 15, 2024 04:37 AM

பெங்களூரு : ''வாக்குறுதித் திட்டங்களை திருத்துவது குறித்து விவாதிக்கவில்லை,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசு அமல்படுத்திய ஐந்து வாக்குறுதிகளில் நான்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும், 'யுவநிதி' திட்டம் துவங்கப்பட்டும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் இன்னும் டிபாசிட் செய்யப்படவில்லை.
தற்போது, இத்திட்ட பெயரை, 'யுவநிதி பிளஸ்' என மாற்றி, உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சியும் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதுபோன்று மற்ற வாக்குறுதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
புதுடில்லிக்கு அமைச்சர்கள், மாநில தலைவர்கள் செல்லும்போது, அக்கட்சி அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். இதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை.
வாக்குறுதித் திட்டங்கள், ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக அமல்படுத்தப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில், 56,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
எனவே, வாக்குறுதித் திட்டங்களை திருத்த முடியாது; இது தொடர்பாக விவாதிக்கவும் இல்லை.
வாக்குறுதித் திட்டங்கள் பற்றி, எம்.எல்.ஏ.,க்கள், செயல் வீரர்கள் பேசியிருக்கலாம். ஆனால், அரசு அளவில் எந்த விவாதமும் நடக்கவில்லை. 'மூடா' விவகாரத்தில் கவர்னரின் நடவடிக்கை குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். அவர் தவறான முடிவு எடுக்கக் கூடாது; வழக்கு தொடர அனுமதிக்கக் கூடாது.
முதல்வருக்கு வழங்கப்பட்ட நோட்டீசை திரும்ப பெற, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கவர்னருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதை கவர்னர் ஏற்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.