பழைய மைசூரு மண்டலம் மீது தனி கவனம் செலுத்தும் அமித் ஷா
பழைய மைசூரு மண்டலம் மீது தனி கவனம் செலுத்தும் அமித் ஷா
ADDED : ஏப் 04, 2024 10:52 PM

பெங்களூரு, - பழைய மைசூரு மண்டலம் மற்றும் பெங்களூரு ரூரல் தொகுதி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி கவனம் செலுத்தி வருகிறார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பழைய மைசூரு மண்டலத்தில் பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது, மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன், சிக்கமகளூரு, உடுப்பி, குடகு, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டது.
அந்த மாவட்டங்களில், காங்கிரஸ் கை ஓங்கியது. ம.ஜ.த.,வுக்கு விழ வேண்டிய ஓட்டுகளும் விழவில்லை. இதனால் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.
இம்முறை லோக்சபா தேர்தலில், இழந்ததை மீண்டும் ஈர்க்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி கவனம் செலுத்தி உள்ளார். ஆறு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று முனைப்புடன் உள்ளார்.
இதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். மைசூரு - யதுவீர்; சாம்ராஜ்நகர் - பால்ராஜ்; உடுப்பி - சிக்கமகளூரு - கோட்டா சீனிவாச பூஜாரி; தட்சிண கன்னடா - பிரிஜேஸ் சவுடா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்துடன், ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்ட மாண்டியா - குமாரசாமி; ஹாசன் - பிரஜ்வல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளின் வேட்பாளர்களை அமித் ஷாவே சிபாரிசு செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், கர்நாடக அரசியலில் கோலோச்சி வரும் துணை முதல்வர் சிவகுமாரின் செல்வாக்கை குறைக்கும் வகையில், அவரது தம்பி போட்டியிடும் பெங்களூரு ரூரலில், செல்வாக்கு மிக்க மஞ்சுநாத் என்ற மருத்துவர் பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த தொகுதிகளின் வெற்றி நிலவரம் குறித்து அடிக்கடி விசாரித்து வரும் அமித் ஷா, சில ஆலோசனைகளையும் அவ்வப்போது சொல்லி வருகிறாராம்.

