லாரியில் ரூ.8 கோடி பறிமுதல் ஆந்திர போலீசார் அதிரடி
லாரியில் ரூ.8 கோடி பறிமுதல் ஆந்திர போலீசார் அதிரடி
ADDED : மே 10, 2024 01:29 AM

கரிகாபாடு, ஆந்திரா - தெலுங்கானா எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில், லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 8.36 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 13ல் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு, தெலுங்கானா எல்லையை ஒட்டி அமைந்துள்ள என்.டி.ஆர்., மாவட்டத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கரிகாபாடு கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியை, ஹைதராபாதில் இருந்து குண்டூர் சென்ற லாரி ஒன்று கடந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில், அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், பி.வி.சி., குழாய்கள் இருந்தன. அப்போது, டிரைவரின் இருக்கைக்கு பின்னால் இருந்த கேபினில் வைக்கப்பட்டிருந்த 8.36 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பணம் கடத்தப்பட்ட லாரி, சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அசிஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, டிரைவர் சண்முகம் மற்றும் கிளீனர் சேகர் ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பணம் எங்கிருந்து, யாருக்கு அனுப்பப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட சோதனையில், ஆந்திராவில் ஒரே சமயத்தில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை.