ADDED : ஜூன் 26, 2024 08:54 AM

ஹாசன் : ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவாகியுள்ளது.
ம.ஜ.த., -- எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, 36. இவரது ஆதரவாளர் சிவகுமார், 35. இவர் கடந்த 21ம் தேதி, ஹொளேநரசிபுரா போலீசில், அரிசிகெரே வாலிபர் மீது புகார் அளித்தார். சூரஜை மிரட்டி 5 கோடி ரூபாய் பறிக்க முயற்சி நடப்பதாக கூறியிருந்தார். இந்த புகாரில், போலீசார் விசாரித்தார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி அரிசிகெரே வாலிபர், சூரஜ் மீது ஹொளேநரசிபுரா போலீசில் பாலியல் தொல்லை புகார் செய்தார்.
இந்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 23ம் தேதி காலையில் சூரஜை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். இதன்பின்னர் நீதிமன்ற அனுமதியுடன், அவரை காவலில் எடுத்து சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில் சூரஜ் மீது பாலியல் புகார் அளித்த வாலிபருக்கு, பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் அரிசிகெரே வாலிபர் மீது போலீசில் புகார் அளித்த, சிவகுமார் திடீரென மாயமானார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையம் சென்ற சிவகுமார், சூரஜ் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்படி, சூரஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவானது.
இதற்கிடையில், நேற்று மாலை அரிசிகெரே வாலிபரின், மருத்துவ பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. இந்த அறிக்கையில் வாலிபரின் உடலில் காயமோ, தாக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்த வாலிபரை மேலும் ஒரு முறை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர்.
சூரஜுக்கும் மரபணு பரிசோதனை, தலைமுடி, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.