ADDED : ஆக 15, 2024 01:55 AM

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், நம் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் என்ற வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, ஜம்மு - காஷ்மீர் போலீசார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு, பாட்னிடாப் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், பாட்னிடாப் வனப்பகுதியில் இருந்து, பக்கத்து மாவட்டமான டோடாவில் உள்ள அசார் என்ற வனப்பகுதிக்குள், நேற்று காலை பயங்கரவாதிகள் நுழைந்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, நேற்று மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
நீண்ட நேரம் நடந்த சண்டையில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், டோடா மாவட்ட பொறுப்பில் இருந்த, நம் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். மேலும், பொது மக்களில் ஒருவர் காயமடைந்தார்.
நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'எம்-4' ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் பகுதி, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
நாடு முழுதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.