ADDED : ஏப் 09, 2024 09:59 PM

ஹாசன் : ''சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கிற்கு, அரசியல் அனுபவம் குறைவு,'' என, அமைச்சர் செலுவராயசாமி கிண்டலாக கூறி உள்ளார்.
விவசாய அமைச்சர் செலுவராயசாமி, ஹாசனில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையில் சண்டை நடக்கிறது. ஆட்சியை அவர்களே கவிழ்ப்பர் என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறி உள்ளார். சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என, அசோக்கிடம் சென்று சிவகுமார் கேட்டாரா? வாய்க்கு வந்தபடி பேசுவதை அசோக் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு அரசியல் அனுபவம் குறைவு.
கடந்த சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து, குமாரசாமியை முதல்வர் ஆக்கினோம். அவர் சரியாக செயல்படாததால், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர்.
லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் குமாரசாமி வெற்றி பெற்றால், மத்தியில் விவசாய அமைச்சர் ஆவார் என, அவரது கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். குமாரசாமி, மத்திய அமைச்சர் ஆவதால் என்ன பயன்?
கர்நாடகாவில் இருந்து பிரஹலாத் ஜோஷி, ஷோபா, சதானந்த கவுடா, பகவந்த் கூபா, நாராயணசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களால் கர்நாடகாவுக்கு என்ன செய்ய முடிந்தது? குமாரசாமியின் நிலையும் அதே தான்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி நீடிக்குமா என்று தெரியவில்லை. தேவகவுடா மூத்த அரசியல்வாதி. அவர் எங்களை விமர்சிக்கட்டும்.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தேவகவுடாவை ஹாசன், துமகூரு மக்கள் தோற்கடித்து உள்ளனர். ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா, மாண்டியாவில் குமாரசாமி இம்முறை தோற்கடிக்கப்படுவர்.
ஹாசன், மாண்டியாவில் போட்டியிட, தேவகவுடா குடும்பத்தை விட்டால், ம.ஜ.த.,வில் வேறு ஒக்கலிக தலைவர்கள் இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.

