அசோக் பாடம் கற்க வேண்டும்: காங்., பிரதீப் ஈஸ்வர் கிண்டல்
அசோக் பாடம் கற்க வேண்டும்: காங்., பிரதீப் ஈஸ்வர் கிண்டல்
ADDED : ஜூன் 30, 2024 10:35 PM

பெங்களூரு : 'எதிர்க்கட்சி தலைவராக எப்படி செயல்பட வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவிடம், அசோக் பாடம் கற்றுக்கொள்ளட்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கிண்டலாக கூறியுள்ளார்.
சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த ஒரு மாதமாக எதிர்கட்சி தலைவர் அசோக்கின் பேட்டிகள், அறிக்கைகளை கவனித்து வருகிறேன். முக்கிய பிரச்னை பற்றி அவர் பேசுவதே இல்லை. எதை வைத்து அரசியல் செய்ய முடியுமோ, அதை பற்றி மட்டும் தான் பேசுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்கக் கூடாதோ, அசோக் அப்படிதான் இருக்கிறார். தனது பதவிக்கு ஏற்ப அவரால் செயல்பட தெரியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவிடம், அசோக் கற்று கொள்ளட்டும்.
சட்டசபையில் அசோக் பேசுவதை, இன்னும் நான்கு ஆண்டுகள் நான் கேட்க வேண்டும். அமைச்சராக இருந்த நாகேந்திரா ராஜினாமாவால், அரசின் ஒரு விக்கெட் விழுந்துவிட்டது.
இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என, அசோக் கூறுகிறார். அவர் களத்தில் இறங்கினால் தானே விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் எனக்கு இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி யாராவது தவறாக பேசினால், கட்சியின் சாதாரண தொண்டனான நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும்.
நானும் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்துகிறேன். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.