ADDED : ஆக 25, 2024 10:22 PM
பெலகாவி: சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை, பொது மக்கள் பிடித்து அடித்து, துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெலகாவி, ராய்பாகின் கைரகோடி கிராமத்தில் வசிப்பவர் சுனில் தீபாளே, 28. இவர் நேற்று காலை, கெஞ்சரவாடி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ரோட்டில் 12 வயது சிறுமி, நடந்து செல்வதை கவனித்தார். பைக்கை நிறுத்தி, எங்கு செல்ல வேண்டும் என, விசாரித்தார்.
சிறுமியும் தான் செல்ல வேண்டிய இடத்தை கூறினார். சுனில் தீபாளே அங்கு 'டிராப்' செய்வதாக கூறி, பைக்கில் ஏற்றிக்கொண்டார். சிறிது துாரம் சென்றதும், ஆள் நடமாட்டமில்லாத பாதையில், செல்ல முற்பட்டார். சந்தேகமடைந்த சிறுமி பைக்கை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் தீபாளே நிறுத்தவில்லை.
பீதியடைந்த சிறுமி, அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதியினர், பைக்கை மடக்கி பிடித்து, சிறுமியை காப்பாற்றினர். சுனில் தீபாளேவை பிடித்து, அடித்து துவைத்து ராய்பாக் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

