ADDED : செப் 14, 2024 08:26 AM

விவேக் நகர்: கபாப் கடையில் காஸ் சிலிண்டர் பொருத்தும்போது தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு ஆட்டோ, ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
பெங்களூரு, விவேக் நகர் ஈஜிபுராவில் நேற்று முன்தினம் இரவு கபாப் கடை ஒன்றில், காஸ் சிலிண்டர் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்தது. பதறிய ஊழியர்கள், சிலிண்டரை துாக்கி வெளியே வீசினர். ஆனால் சிலிண்டரோ, சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆட்டோ அருகில் விழுந்தது.
சிலிண்டரில் இருந்த தீ, ஆட்டோவுக்கும் பரவியது. தீ மளமளவென எரிந்தது. அருகில் இருந்த ஐந்து இருசக்கர வாகனங்களுக்கும் பரவியது. தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அக்கம் பக்கத்து கடையில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சிலிண்டர் மாற்றும்போது தீப்பற்றியதால் தீயணைப்பு படையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விவேக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தீப்பிடித்து எரிந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள். இடம்: விவேக் நகர், பெங்களூரு.