ADDED : மே 26, 2024 06:45 AM

கடந்த 1990 காலகட்டங்களில் கணவர், பிள்ளைகள், குடும்பம் என்று கவனித்துக் கொண்டு, தங்களின் ஆசைகளை குழிதோண்டி புதைத்த பெண்கள், தற்போது அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
'எங்களாலும் அனைத்தும் செய்ய முடியும்' என, ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்றனர். விமானம், ரயில், கப்பல், பஸ், போர் விமானங்கள் ஓட்டுவது என அனைத்திலும், பெண்கள் தனி முத்திரை பதித்துவிட்டனர்.
கர்நாடக தலைநகரான பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு, பெயர் பெற்ற நகரம். இங்கு 1.50 லட்சம் ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஆண் ஆட்டோ டிரைவர்களே விழிபிதுங்கும் நிலையில், அவர்களுக்கு நிகராக பெண்களும் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள 'நம்ம யாத்ரி' என்ற நிறுவனம், மின்சார ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், பயிற்சி முடித்ததும் ஆட்டோ ஓட்டவும் வாய்ப்பு வழங்குகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் தற்போது, பெங்களூரு நகரில் 60 பெண்கள் ஓட்டுகின்றனர். ஆட்டோ ஓட்டும் பெண்கள் தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து உள்ளனர்.
15 நாட்களிலேயே பழகினேன்
நான் முன்பு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தேன். காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, வேலை இருக்கும். மாதம் 12,000 ரூபாய் சம்பளம் என்று சொல்லி வேலைக்கு சேர்த்தனர். ஆனால் சம்பளம் சரியாக தரவில்லை. மாதம் 6,000 முதல் 7,000 ரூபாய் வரை கிடைத்தது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டேன். எனது தோழி ஒருவரின் மூலம் 'நம்ம யாத்ரி' நிறுவனம் பற்றி எனக்கு தெரிந்தது. அங்கு சென்று ஆட்டோ ஓட்டும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். பயிற்சி அளித்தனர். 15 நாட்களில் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். இப்போது தினமும் 1,500 முதல் 1,700 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். பெண்கள் ஆட்டோ ஓட்டுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன.
புவனேஸ்வரி
மகிழ்ச்சியாக உள்ளேன்
ஒரு நிறுவனத்தில் தரையை சுத்தப்படுத்தும், வேலைக்கு சென்றேன். அங்கு குறைந்த சம்பளமே கொடுத்தனர். சனி, ஞாயிறு கூட வேலை இருந்தது. இதனால் எனது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. தற்போது ஆட்டோ ஓட்டுவதால், நல்ல வருமானம் கிடைக்கிறது. வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறையும் உள்ளது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு சாலைகளில், ஆட்டோ ஓட்டிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமான ஆட்டோவை விட, மின்சார ஆட்டோவில் கற்றுக் கொள்ளவும் எளிதாக உள்ளது. பெண்கள் ரயில், விமானம், பஸ், கப்பல் ஓட்டுகின்றனர். என்னால் ஆட்டோ ஓட்ட முடியாதா?
சுகன்யா
சிறப்பாக பயிற்சி
எனது கணவரும் ஆட்டோ டிரைவர் தான். நான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் எனக்கு சொல்லிக் கொடுக்கும், பொறுமை அவரிடம் இல்லை. ஆட்டோ ஓட்டும்போது, ஏதாவது தவறு செய்தால் திட்டி விடுவார். இதனால் ஆட்டோ ஓட்டும் ஆசையை கைவிட்டேன்.
'நம்ம யாத்ரி'யில் பயிற்சியும் அளித்து, ஆட்டோ ஓட்டவும் கற்றுக் கொடுக்கின்றனர் என்று தெரிந்ததும், இங்கு வந்துவிட்டேன். நாகலட்சுமி சிறப்பாக பயிற்சி அளித்தார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தில், எனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையானதை வாங்குகிறேன்.
ஜாஹினா
பார்க்கவே அழகாக இருக்கும்
கடந்த 2022க்கு முன்பு வரை, ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தேன். எனக்கு ஆட்டோ ஓட்ட, முன்பே தெரியும். பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்க, எனக்கு அழைப்பு வந்தது. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், மருத்துவமனை வேலையை விட்டுவிட்டேன். பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பது எனது ஆசை. நிறைய பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளேன். பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை பார்க்கவே அழகாக இருக்கும். பெண்கள் நினைத்தால் முடியாதது என்று, எதுவும் இல்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வர வேண்டும்.
நாகலட்சுமி, பயிற்சியாளர்- நமது நிருபர் -