ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் கூடாது சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் கூடாது சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
UPDATED : ஆக 05, 2025 10:29 AM
ADDED : ஆக 05, 2025 04:05 AM

சென்னை: 'சொத்து விற்பனை தொடர்பாக, பதிவுக்கு தாக்கலாகும் பத்திரங்களில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் நடந்ததாக தெரிய வந்தால், அதை அனுமதிக்க கூடாது' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. இதில் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, வருமான வரித்துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, சொத்து பரிமாற்றத்தின் போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்கம் அனுமதிக்க கூடாது.
ஏற்கனவே இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு இடங்களில், பத்திரங்களில் அதிக தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக குறிப்பிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு:
சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது. அவ்வாறு வந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து சார் - பதிவாளர்களும், இது விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இல்லாததை, உறுதி செய்ய வேண்டும்.
இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார் - பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.