இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் 3 நாள் பயணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் 3 நாள் பயணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
ADDED : அக் 16, 2025 02:22 PM

புதுடில்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு வந்துள்ளார். டில்லியில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றார். டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் ஹிந்து காலேஜ் முன்னாள் மாணவியான ஹரிணி, இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக, 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஹரிணி அமரசூரியா சந்தித்து பேசினார். இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேம்பாடு, பாதுகாப்பு, தொழில், வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் இருநாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
படித்த கல்லூரியில்....!
இலங்கை பிரதமர் ஹரிணி தான் படித்த டில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரிக்கு நேரில் சென்றார். அவர்கள் மாணவர்களை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். இலங்கையின் கல்வி அமைச்சராகவும் உள்ள ஹரிணி, டில்லி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கல்வித்துறை சார்ந்த தொழில்நுட்ப பகிர்வு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
அண்டை நாடுகளுடனான நட்புக்கு முக்கியத்துவம் என்ற நம் வெளியுறவு அமைச்சக கொள்கையின் அடிப்படையில், இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேம்பாடு, பாதுகாப்பு, தொழில், வர்த்தகம் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை பிரதமர் ஹரிணி பேச்சு நடத்த இருக்கிறார்.