ADDED : ஆக 02, 2024 12:55 AM
ஆனந்த் பர்பத்: குழந்தையைக் கொன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அமானுஷ்ய சக்தி ஆட்டிப்படைத்ததால் கொன்றதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய டில்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை ஜூலை 20ம் தேதி திடீரென மாயமானது. இதுகுறித்து ஆனந்த் பர்பத் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜூலை 21ல் குடிசைக்கு அருகே உள்ள கழிப்பறையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்து பார்த்த போலீசார், அதன் அடிப்படையில் 17 வயது சிறுவனை அடையாளம் கண்டனர். அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். அமானுஷ்ய சக்தி கேட்டுக் கொண்டதால், குழந்தையைக் கொன்றதாக போலீசில் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.