பகுஜன் எம்.எல்.ஏ., கொலை வழக்கு: 7 பேர் குற்றவாளிகள்
பகுஜன் எம்.எல்.ஏ., கொலை வழக்கு: 7 பேர் குற்றவாளிகள்
ADDED : மார் 29, 2024 11:36 PM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்தவர் ராஜு பால். இவர், 2002ல் நடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த அரசியல்வாதியும், பிரபல தாதாவுமான அதீக் அஹமதிடம் தோல்வியை தழுவினார். அதீக் அஹமது எம்.பி.,யாக தேர்வான பின், 2004ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் ராஜு பால் போட்டியிட்டார்.
இந்த முறை அவரை எதிர்த்து நின்ற அதீக் அஹமதுவின் சகோதரர் அஷ்ரபை வீழ்த்தி, எம்.எல்.ஏ.,வாக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், 2005ல் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த ராஜு பாலை, தேர்தல் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்; அவருடன் பேசிக் கொண்டிருந்த மேலும் இருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் அதீக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இது தொடர்பான விசாரணை லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், ராஜு பால் கொலை வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அதீக் அஹமது, அஷ்ரப், ரபி ஆகிய மூவரும் தற்போது உயிருடன் இல்லை. அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், வழக்கு விசாரணை ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட போது, பிரயாக்ராஜ் நீதிமன்றம் அருகே மர்ம நபர்களால் அதீக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

