பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
ADDED : செப் 07, 2024 12:58 AM

புதுடில்லி, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்ததை அடுத்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 30. அதே மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத், 30.
கடந்த 2020ல், ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளின் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் தகுதி பெற்றார். போட்டி நாளன்று, அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, கடந்த ஆண்டு பாலியல் புகார் எழுந்த போது, இவர்கள் இருவரும் அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்களை அணி திரட்டி போராடினர்.
புனியாவும், போகத்தும் காங்கிரஸ் எம்.பி., ராகுலை கடந்த 4ம் தேதி டில்லியில் சந்தித்தனர்.
ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ல் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த சந்திப்பு பல்வேறு ஊகங்களை கிளப்பியது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தனர். அதன் பின் காங்., தலைமையகத்துக்கு சென்று, பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கே.சி.வேணுகோபால் பேசுகையில், ''ராகுலை சமீபத்தில் வினேஷ் போகத் சந்தித்த பின், அவர் பணியாற்றி வந்த ரயில்வே துறை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
''இந்த விவகாரத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம். ஹரியானா தேர்தலில் இவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்,'' என்றார்.
வீராங்கனை வினேஷ் போகத் பேசுகையில், ''போராட்டத்தில், நாங்கள் சாலையில் கிடந்த போது பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக இருந்தன. நாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வேறு விளையாட்டு வீரர்கள் அனுபவிக்க கூடாது. அதற்காக தான் புதிய அத்தியாயத்தை துவங்கிஉள்ளோம்,'' என்றார்.
கட்சியில் சேருவதற்கு முன்னதாக, தன் ரயில்வே பணியை வினேஷ் போகத் நேற்று காலை ராஜினாமா செய்தார்.