நடிகர் தர்ஷனுக்கு பல்லாரி சிறை பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு
நடிகர் தர்ஷனுக்கு பல்லாரி சிறை பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : ஆக 28, 2024 01:40 AM

பெங்களூரு, கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, கொலை வழக்கில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட 13 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற நால்வர், துமகூரு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சிறைக்குள் இருக்கும் பிரபல ரவுடிகளான வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன் அமர்ந்து தர்ஷன், 'தம்' அடித்தபடி டீ குடிக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
மேலும், சிறையில் இருந்தபடி வெளியே இருக்கும் ரவுடி ஒருவரிடம் வீடியோ காலில் தர்ஷன் பேசிய காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்ததால், சிறை சூப்பிரண்டுகள், வார்டன்கள் என ஒன்பது பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரை வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கேட்டு, பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் சோமசேகர், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி விஸ்வநாத் நேற்று மாலை விசாரித்தார்.
அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார் வாதிடுகையில், “கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷன் தன் செல்வாக்கை பயன்படுத்தி, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். ரவுடிகளும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
“தர்ஷனையும், அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரையும் வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஸ்வநாத், தர்ஷன், கூட்டாளிகள் ஒன்பது பேரை வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி அளித்தார். இதன்படி, தர்ஷன் பல்லாரி மத்திய சிறைக்கும், அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரும் மாநிலத்தில் வெவ்வேறு சிறைகளுக்கும் மாற்றப்படுகின்றனர்.