ADDED : ஆக 06, 2025 02:27 AM

நொய்டா : உத்தர பிரதேசத்தில், இறந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு, 1.13 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர், இரண்டு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது பெயரில், 'கோட்டக் மஹேந்திரா' வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. இதை, அவரது மகன் தீபக் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி, இவரது வங்கி கணக்கில் 36 இலக்கம் உடைய தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக, 'மொபைல் போன்' எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக்கால், டிபாசிட் ஆகி இருக்கும் தொகை எவ்வளவு என்பதை கூட எண்ண முடியவில்லை. அவர், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று விபரங்களை கூறினார்.
வங்கி அதிகாரிகள், அந்த சேமிப்பு கணக்கை ஆய்வு செய்ததில், வழக்கத்திற்கு மாறாக 1.13 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ததுடன், வங்கி தலைமையகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, உடனடியாக அந்த வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கினர்.
வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, இறந்தவரின் வங்கி கணக்கிற்கு 1.13 லட்சம் கோடி ரூபாய் எவ்வாறு வந்தது? அனுப்பியது யார்? என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வங்கி தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அல்லது பண மோசடியில் ஈடுபடுவோர் இந்த வங்கி கணக்கை பயன்படுத்தி இருக்கலாம் என, பல்வேறு கோணங்களில் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.