நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி; கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி; கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
UPDATED : நவ 07, 2025 03:17 PM
ADDED : நவ 07, 2025 03:07 PM

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி ஆழமும் கொண்டது. கன மழையால் ஏரி நிரம்பியதையடுத்து, கடந்த 21ம் தேதி முதல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கன மழையின் போது, 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மழை குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், விட்டு விட்டு பெய்யும் கன மழை காரணமாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில் இன்று (நவ.,07) ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்ட நிலையில், அதன் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தற்போது நிலவரப்படி, ஏரியில் நீர்மட்டம் 23 அடியாக உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால், திறக்கப்படும் நீர் அளவு உயர்த்தப்படும். அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

