சட்டவிரோத மசூதிகளை அகற்ற ஹிமாச்சல பிரதேசத்தில் 'பந்த்'
சட்டவிரோத மசூதிகளை அகற்ற ஹிமாச்சல பிரதேசத்தில் 'பந்த்'
ADDED : செப் 15, 2024 12:07 AM

சிம்லா: சட்டவிரோதமாக அமைந்துள்ள மசூதிகளை அகற்ற வலியுறுத்தியும், சட்டவிரோதமாக தங்கிஉள்ளவர்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற கோரியும் ஹிந்து அமைப்பினர் நேற்று ஹிமாச்சல பிரதேசத்தில், 'பந்த்' நடத்தினர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள சிம்லாவில் சஞ்சவ்லி பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை அகற்ற வலியுறுத்தி ஹிந்து அமைப்பினர் கடந்த 11ம் தேதி போராட்டம் நடத்தினர். இதில், நான்கு போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
அதேபோல், மண்டி நகரில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதியை அகற்றக் கோரியும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, மாநிலம் முழுதும் நேற்று இரண்டு மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடந்த போராட்டத்தால், மாநிலம் முழுதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பிலாஸ்பூர், குலு, போயன்டா சாஹிப் உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
சம்பா, ஹமீர்பூர் பகுதிகளில் அவர்கள் ஹனுமன் சாலிசாவை பாடியபடி பேரணியாக சென்றனர். சிம்லாவில் இதே காரணத்துக்காக ஏற்கனவே பந்த் அனுசரிக்கப்பட்டதால், பெரிய அளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இரண்டு மசூதிகளை அகற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது, ஊர்வலமாக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மாநிலம் முழுதும் உள்ள வெளிமாநிலத்தவர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் கேசவ் வர்மா கூறுகையில், ''முஸ்லிம் சமூகத்தின் பெயரில் ஏராளமானவர்கள் மாநிலம் முழுதும் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களை ஆய்வு செய்து வெளியேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
''அரசு செவிசாய்க்கவில்லை. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்களுடன் தங்கியுள்ளனர். அவர்களையும் வெளியேற்ற வேண்டும்,'' என்றார்.