'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை
'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை
ADDED : ஏப் 24, 2024 01:42 AM
மும்பை, 'கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீசை வெளியிட, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் வங்கி களில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அவர்களை நாடு கடத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க, 2018ல் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்தது.
இதன்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அவர் நம் நாட்டில் இருந்து வெளியேற முடியாது.
இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு நேற்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவுதம் படேல், மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரம் அளித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த வங்கிகள் வெளியிட்ட நோட்டீசுகளுக்கு குடியுரிமை துறை இணங்காது.
கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, நீதிமன்றம் அல்லது குற்றவியல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை இந்த தீர்ப்பு பாதிக்காது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

