பெமல் ஒப்பந்த தொழிலாளர் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!
பெமல் ஒப்பந்த தொழிலாளர் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!
ADDED : ஜூலை 29, 2024 06:39 AM

தங்கவயல்,: தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் 2,500 தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை நிரந்தரம் ஆக்காமல், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை நிரந்தர பணியாளர்களாக வேலைக்கு தேர்வு செய்திருப்பதாக தெரியவந்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பெமலில் முதல் 'ஷிப்ட்' வேலைக்கு சென்ற ஒப்பந்த ஊழியர்கள் வேலை எதுவும் செய்யாமல் 'டூல் டவுன்' போராட்டம் நடத்தினர். அதுவே உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இரண்டாம் ஷிப்ட் பணியாளர்கள் யாரையும் பெமலில் அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் மயக்கம்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதுவும் சாப்பிடவில்லை. இதனால் சோர்வடைந்த மூன்று தொழிலாளர்கள் உடல் நலம் பாதித்து மயக்கம் அடைந்தனர். பெமல் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், பெமல் நிறுவன அதிகாரிகளுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
நேற்று காலை, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு, தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா, பங்கார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி ஆகியோர் பெமல் நிறுவன அதிகாரி களுடன் பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் சந்தித்து பேசினர். ஆகஸ்ட் 30க்குள் பெமல் நிறுவன உயர் நிலைக்குழுவுடன் ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திதீர்வு காணப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
வாக்குறுதிக்கு மதிப்பு
தொழிலாளர்களோ, 'நிர்வாகம் எங்களை பல முறை ஏமாற்றிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளான உங்கள் வாக்குறுதிக்கு மதிப்பளித்து போராட்டத்தை கை விடுகிறோம்' என்றனர்.
இதையடுத்து, கோலார் எம்.பி., மல்லேஸ்பாபு பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
ஆக., 30 க்குள் தீர்வு?
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னை பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தனக்கு தெரிவித்தனர். பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்க வேண்டியது மத்திய அமைச்சகம். அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இங்குள்ள அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் இல்லை.
ஆன்லைன் மூலம் வேலைக்கு நபர்கள் சேர்க்கப்படுவதை தடுக்க முடியாது. அதே வேளையில் பெமலில் பல ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கும் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமை தர வேண்டும் என்று கோரப்படும். ஆகஸ்ட் 30க்குள் நிர்வாக இயக்குனருடன் ஆலோசனை நடத்தப்படும்.
- மல்லேஸ் பாபு,
எம்.பி., - ம.ஜ.த., கோலார் தொகுதி
***
2 தொகுதிகளில் 'பந்த்'
பொதுத்துறை நிறுவனமான பெமலில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால், தங்கவயல், பங்கார்பேட்டை 'பந்த்' போராட்டம் நடத்துவேன்.
நாராயணசாமி,
எம்.எல்.ஏ., - காங்., பங்கார்பேட்டை
***
*இருவருக்கும் ஆதரவு
பெமல் தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் போராடும் முன், முன்னதாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள், பெமல் நிர்வாக அதிகாரிகளுடன் பேச வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்திருப்பதை தடுக்க முடியாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்ன கிடைக்க வாய்ப்பு உள்ளதோ, அதை வழங்க வேண்டும்.
- ரூபகலா
எம்.எல்.ஏ., - காங்., தங்கவயல்

