பெங்., வெளிவட்ட சாலை பணிகள் டிசம்பருக்குள் முடிக்க கட்கரி இலக்கு
பெங்., வெளிவட்ட சாலை பணிகள் டிசம்பருக்குள் முடிக்க கட்கரி இலக்கு
ADDED : ஜூலை 08, 2024 06:28 AM
பெங்களூரு: 'பெங்களூரு சாட்டிலைட் டவுன் வெளிவட்ட சாலை பணிகளை, வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் வேகமாக உயர்ந்து உள்ளது. ஒரு கோடி பேருக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். நகரில் தினமும் 10 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
ரூ.17,000 கோடி
போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெங்களூரில் சில பகுதிகளில் வெளிவட்ட சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவின் துமகூரு, ஹாசன், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், பெங்களூரு நகருக்குள் வந்து தான் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் நகரில் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும், பெங்களூரை சுற்றியுள்ள தாபஸ்பேட், ராம்நகர், மாகடி, ஹொஸ்கோட், தொட்டபல்லாபூர், சர்ஜாபூர், தேவனஹள்ளி, சுளிபெலே, அத்திப்பள்ளி, தட்டகெரே, தமிழகத்தின் ஓசூர் ஆகிய பகுதிகளை விரைவில் இணைக்கும் வகையில் 17,000 கோடி ரூபாய் செலவில் 280 கி.மீ.,க்கு சாட்டிலைட் டவுன் வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள், கடந்த 2018ல் துவங்கின.
நிலம் கையகப்படுத்துதல், பன்னரகட்டா வனப்பகுதி வழியாக சாலை அமைப்பதில் எழுந்துள்ள சிக்கல் உட்பட சில பிரச்னைகளால், சாலை பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 11ல் திறப்பு
இதற்கிடையில், வெளிவட்ட சாலையில் தாபஸ்பேட்- - ஹொஸ்கோட் இடையில் 80 கி.மீ.,க்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், கடந்த மார்ச் 11 ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. 'மீதமுள்ள பணிகளையும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்' என்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.