பெங்களூரு 3ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்; ரூ.15,611 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
பெங்களூரு 3ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்; ரூ.15,611 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
ADDED : ஆக 18, 2024 11:40 PM

பெங்களூரு : பெங்களூரு மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது செல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு வரை 42.17 கிலோ மீட்டர் துாரத்திற்கும், நாகசந்திராவில் இருந்து சில்க் இன்ஸ்டிடியூட் வரை 30.3 கி.மீ., துாரத்திற்கும், மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன.
மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 6 லட்சம் பேர், பயணம் செய்து வந்தனர். இந்த மாதத்தில் இரண்டு முறை, ஒரே நாளில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டி உள்ளது. ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையிலும், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும், பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மறு அறிக்கை
இந்நிலையில் பெங்களூரு ஜே.பி., நகர் 4வது பேசில் இருந்து, கெம்பாபுரா வரை 32.15 கி.மீ., துாரத்திற்கும், மாகடி சாலையின் ஹொசஹள்ளியில் இருந்து கடபகெரே வரை 12.50 கி.மீ., துாரத்திற்கு, மூன்றாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் கேட்டு, கர்நாடக அரசுக்கு, மெட்ரோ நிர்வாகம் 2022ல் அறிக்கை தாக்கல் செய்தது. புதிய ரயில் பாதை அமைக்க ஆகும் செலவு 16,328 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.
கடந்த 2023 பிப்ரவரியில் புதிய மெட்ரோ ரயில் பாதை அமைப்பது தொடர்பான, திட்ட அறிக்கையை மத்திய அரசிடம், கர்நாடக அரசு சமர்பித்தது. திட்டத்திற்கு ஆகும் செலவை குறைத்து, மறு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
பின், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட, மறு திட்ட அறிக்கையில், புதிய மெட்ரோ ரயில் பாதைக்கு ஆகும் செலவு 16,041 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கும் மத்திய அரசு ஒப்பு கொள்ளவில்லை.
உள்கட்டமைப்பு
இதையடுத்து 15,611 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரித்து, கடந்த மார்ச் மாதம் அரசு மீண்டும் அனுப்பியது.
இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசின் பொது முதலீட்டு வாரியம், மே மாதம் ஒப்புதல் அளித்தது. கடந்த மாதம் மத்திய நிதி துறையிடம் ஒப்புதல் கிடைத்தது.
பின், மத்திய அமைச்சரவையிடம், திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தற்போது திட்ட அறிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை 2029ம் ஆண்டுக்குள் முடிக்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி விட்டன.
ஜே.பி.நகர் 4வது பேஸ் - கெம்பாபுரா இடையில் ஜே.பி.நகர் 5வது பேஸ்; ஜே.பி.நகர்; கதிரேனஹள்ளி கிராஸ்; கமக்யா பஸ் டிப்போ; ஹொசகெரேஹள்ளி கிராஸ்; பி.இ.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; மைசூரு ரோடு; நாகரபாவி சதுக்கம்; விநாயகா லே - அவுட்.
அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; நாகரபாவி பி.டி.ஏ., காம்ப்ளக்ஸ்; சும்மனஹள்ளி கிராஸ்; சவுடேஸ்வரி நகர்; பிரிடம்பைட்டர் கிராஸ்; கன்டீரவா ஸ்டூடியோ; பீன்யா; பாகுபலி நகர்; பி.இ.எல்., சதுக்கம்; பட்டேலப்பா லே - அவுட்; ஹெப்பால் ரயில் நிலையங்கள் வர உள்ளன.
ஹொசஹள்ளி - கடபகெரே இடையில் கே.எச்.பி., காலனி; விநாயகா நகர்; சும்மனஹள்ளி கிராஸ்; சுங்கதகட்டே; ஹீரோஹள்ளி; பேடரஹள்ளி; பாரஸ்ட்கேட் ரயில் நிலையங்கள் வருகின்றன.
'நம்ம பெங்களூரு உள்கட்டமைப்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மேலும் 30 ரயில் நிலையங்களுடன், 2 புதிய மெட்ரோ ரயில் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
'இதன்மூலம் நகரின் மெட்ரோ சேவை விரிவடையும். இது பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தும். எளிதான வாழ்க்கையை ஊக்குவிக்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.