பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி கேரள பிரசாரத்தில் காரசார விவாதம்
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி கேரள பிரசாரத்தில் காரசார விவாதம்
ADDED : ஏப் 18, 2024 04:21 AM
பெங்களூரு : பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை குறித்து, கேரளாவில் காரசார சர்ச்சை நடக்கிறது. இதே விஷயத்தை பிரசார அஸ்திரமாக பயன்படுத்தபடுகிறது.
பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை, பல ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கிறது. சர்வதேச அளவில் நகரின் அவப்பெயருக்கும் இதுவே காரணமாகிறது. ஆட்சிக்கு வந்த பா.ஜ., காங்கிரஸ் என, எந்த அரசுகளாலும் நகரின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு சில நாட்களே உள்ளன. இதில் போட்டியிடும் எந்த கட்சிகளின் வேட்பாளர்களும், பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை குறித்து, வாய் திறக்கவில்லை.
பிரசாரத்திலும் இதை பற்றி குறிப்பிடுவதில்லை. ஆனால் கர்நாடக தலைநகர் பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை தொடர்பாக, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காரசார விவாதம் நடக்கிறது.
லோக்பா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில், பா.ஜ., சார்பில் ராஜிவ் சந்திரசேகர், காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர் போட்டியிடுகின்றனர்.
கேரள காங்கிரஸ் கமிட்டி, 'எக்ஸ்' வலைதளத்தில் பெங்களூரின் விவாதத்துகுரிய இரும்பு மேம்பாலம் திட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளது. 2016ல் சித்தராமையா அரசு, இந்த திட்டத்தை வகுத்தது.
ஆனால் சுற்றுச்சூழல் பாழாவதாக கூறி, திட்டத்துக்கு ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், பெங்களூரு நகரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு, தீர்வு கிடைத்திருக்கும்' என, கூறியிருந்தது.
இதற்கு பதிலடி கொடுத்த கேரள பா.ஜ., 'திட்டத்தால் சுற்றுச்சூழல் நாசமாகும். பொது மக்களுடன் கலந்தாலோசிக்காமல் திட்டத்தை வகுத்தனர்' என கூறியது.
பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், 'பெங்களூரு நகரில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல, ஒரு மணி நேரமாகிறது. திருவனந்தபுரத்தில் ராஜிவ் சந்திரசேகர் ஜெயித்தாலும், அடிப்படை வசதிகள் திட்டத்தை செயல்படுத்துவது சந்தேகம்' என கூறியது.
காங்கிரசுக்கு ராஜிவ் சந்திரசேகர் பதிலளிக்கவில்லை என்றாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.எப்.ஓ., மோகன்தாஸ் பை பதிலடி கொடுத்துள்ளார். 'கேரள காங்கிரசார் தங்களுடைய விஷயத்தை பார்த்துக் கொள்ளட்டும்.
அங்குள்ள இளைஞர்கள் பலர், பிழைப்பு தேடி கர்நாடகாவுக்கு வருகின்றனர். முதலில் இவர்களை தங்கள் மாநிலத்திலேயே தக்க வைத்து கொள்ளட்டும்.
'கேரள காங்கிரஸ், பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையை பற்றி, கவலைப்படுவதை விட்டு விட்டு, தங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்கட்டும்' என சாடியுள்ளார்.

