பவானி ரேவண்ணா தலைமறைவு? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஏமாற்றம்
பவானி ரேவண்ணா தலைமறைவு? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 02, 2024 06:13 AM

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மனைவி பவானி தலைமறைவாகி விட்டாரா என்ற சந்தேகம், எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. நேற்றைய விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்த அவரை தேடும் பணியை தீவிரப்படுத்திஉள்ளனர்.
சம்மன்
ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார். இதே வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, ரேவண்ணாவின் மனைவி பவானிக்கு, சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். மனு மீது கடந்த மாதம் 28, 29ம் தேதிகளில் விசாரணை நடந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பவானியின் முன்ஜாமின் மனுவை, நீதிபதி சந்தோஷ் பட் தள்ளுபடி செய்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக, பவானிக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனில், 'ஜூன் 1ம் தேதி காலை 10:00 மணியில் இருந்து மாலை 5:00 மணிக்குள், ஹொளேநரசிபுரா வீட்டில் வைத்து, உங்களிடம் விசாரணை நடத்த வருகிறோம்' என கூறப்பட்டு இருந்தது.
தலையிட முடியாது
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு, ஹொளேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா வீட்டிற்கு, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சென்றனர். ஆனால் பவானி வீட்டில் இல்லை. வீட்டு வேலைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். பவானிக்காக, அதிகாரிகள் காத்திருந்தனர்.
நேற்று மதியம் 1:00 மணிக்கு, பவானி வீட்டிற்கு, அவரது வக்கீல்கள் 3 பேர் வந்தனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'பவானி கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்று, எங்களுக்கு தெரியவில்லை. அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. சட்டத்தை பற்றி பவானிக்கு நன்கு தெரியும். சிறப்பு புலனாய்வு குழுவினர் எடுக்கும் முடிவில், நாங்கள் தலையிட முடியாது' என்றனர்.
மாலை 5:00 மணி வரை காத்திருந்தும், பவானி வராததால், சிறப்பு புலனாய்வு குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பவானி, 15 நாட்களுக்கு முன்பே, வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. கைதுக்கு பயந்து, அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவரை தேடும்பணியில் எஸ்.ஐ.டி.,யின் ஒருபிரிவினர் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.