ADDED : மார் 25, 2024 04:44 AM

தார் : மத்திய பிரதேசத்தின் போஜ்சாலா வளாகத்திற்குள், தொல்லியல் துறையினர் நடத்தும் ஆய்வுப் பணியில், முஸ்லிம் தரப்பு சில ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் மிகப் பழமையான போஜ்சாலா வளாகம் உள்ளது. இதை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சரஸ்வதி கோவில் என ஹிந்துக்கள் தரப்பும், கமல் மவுலா மசூதி என முஸ்லிம்கள் தரப்பும் தெரிவித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், 2003 மார்ச் 7ல் தொல்லியல் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, இந்த வளாகத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் ஹிந்துக்கள் தரப்பு பூஜைகள் நடத்தவும், வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.
அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், போஜ்சாலா வளாகத்துக்குள் தொல்லியல் துறையினர் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த, ம.பி., உயர் நீதிமன்றம் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி முதல், போஜ்சாலா வளாகத்திற்குள் தொல்லியல் துறையினர் ஆய்வை துவங்கினர். போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பு முன்னிலையில் ஆய்வு நடந்து வருகிறது.
நேற்று மூன்றாவது நாளாக ஆய்வு பணிகள் தொடர்ந்தன. இந்த ஆய்வுப் பணியில் சில ஆட்சேபனைகளை முஸ்லிம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கமல் மவுலா மசூதி நலச்சங்க தலைவர் அப்துல் சமது, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தொல்லியல் ஆய்வின் போது, மசூதி தரப்பில் இருந்து நான் மட்டும் தான் உடன் இருக்கிறேன். தொல்லியல் துறையில் இருந்து மூன்று குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்கள் மூன்று வெவ்வேறு இடங்களில் ஆய்வு செய்யாமல், அனைவரும் ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 2003க்கு பின் போஜ்சாலா வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பொருட்களை தொல்லியல் துறையினர் கணக்கில் எடுக்கக் கூடாது. இந்த ஆட்சேபனைகளை, இ - மெயில் வாயிலாக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

