ADDED : மார் 02, 2025 06:14 AM
பல்லாரி: சிக்கபல்லாபூரை தொடர்ந்து, பல்லாரியிலும் பறவை காய்ச்சல் பரவியது, ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான கோழிகள் உயிரிழந்தன.
இதன் காரணமாக, இம்மாநிலங்களில் இருந்து கோழிகள் வாங்குவதற்கு பீதர், பல்லாரி, பெலகாவி ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்தனர்.
அச்சம்
இந்நிலையில், கடந்த மாதம் 22 ம் தேதி சிக்கபல்லாபூரை சேர்ந்த தியாவப்பா, ரத்னம்மா ஆகியோர் வீடுகளில் வளர்க்கப்பட்ட 36 கோழிகள் மர்மமான முறையில் இறந்தன.
ஒரே நேரத்தில் பல கோழிகள் இறந்ததால், அவற்றின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், பொது மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் பல்லாரி சண்டூர் தாலுகாவில் உள்ள குரேகுப்பா கிராமத்திற்கு அருகே ஒரு கோழிப்பண்ணை உள்ளது.
இந்த கோழிப்பண்ணையில் கடந்த மாதம் 21ம் தேதி 2,400 கோழிகள் மர்மமான முறையில் இறந்து உள்ளன. இந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆய்வு அறிக்கை
இந்த ஆய்வு அறிக்கை நேற்று வெளியானது. இதில் கோழிகள் இறப்புக்கு காரணம் பறவை காய்ச்சல் தான் என உறுதியானது. இந்த காய்ச்சல் ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பரவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பல்லாரி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பறவை காய்ச்சலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணை உள்ள பகுதியில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
குரேகுப்பா கிராமத்தை சுற்றி 1 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ள பகுதிகள் ஆபத்தான மண்டலமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தோரணக்கல்லு, குரேகுப்பா, வட்டு, தாலூர், பாசாபுரா, தரோஜி, தேவலாப்பூர் போன்ற கிராமங்கள் தீவிர கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
சிக்கபல்லாபூரை தொடர்ந்து பல்லாரியிலும் பறவை காய்ச்சல் பரவி விட்டது. இதனால், அருகில் உள்ள ராய்ச்சூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொது மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.