'பிட் காயின்' முறைகேடு வழக்கு டி.ஐ.ஜி., சேஷாவுக்கு தொடர்பு?
'பிட் காயின்' முறைகேடு வழக்கு டி.ஐ.ஜி., சேஷாவுக்கு தொடர்பு?
ADDED : ஜூலை 12, 2024 06:46 AM
பெலகாவி; 'பிட்காயின்' முறைகேடு வழக்கில் சிறைத்துறை டி.ஐ.ஜி., சேஷாவுக்கு தொடர்பு இருப்பதாக, பெலகாவி சிறையில் உள்ள கைதியிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு, ஜெயநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 29. பல நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி, பல கோடி ரூபாய் மதிப்பிலான பிட் காயின்களை அபகரித்த வழக்கில், கடந்த 2020ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை எஸ்.ஐ.டி., விசாரித்து வருகிறது. பிட்காயின் முறைகேட்டில் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
இந்த வழக்கில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெலகாவி சிறையில், சிறை துறை கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவரிடம் கைதி நாகேந்திரன் என்பவர், 'பிட்காயின் முறைகேடு வழக்கில், சிறை துறை டி.ஐ.ஜி., சேஷாவுக்கு தொடர்பு உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு புதிய லேப்டாப் வாங்கிக் கொடுத்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, பிட்காயின்களை சேஷா கணக்கிற்கு மாற்றியுள்ளார்' என்று கூறியிருந்தார்.
இது குறித்து, எஸ். ஐ.டி., அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை பெலகாவி சிறைக்கு சென்ற, எஸ்.ஐ.டி., அதிகாரிகள், கைதி நாகேந்திரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர்.
ஆனால், 'பிட் காயின் முறைகேட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் ஸ்ரீ கிருஷ்ணாவை பார்த்ததே இல்லை' என்று சேஷா கூறியுள்ளார். ஆனாலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளது.