ADDED : ஜூலை 23, 2024 06:00 AM
பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு, கூட்டணியை மேலும் வலுப்படுத்த பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி திட்டமிட்டுள்ளன. மத்திய அமைச்சர் குமாரசாமி மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசை, நெருக்கடியில் சிக்கவைக்க பா.ஜ., மேலிடம் முயற்சிக்கிறது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கைகோர்த்து ஆளுங்கட்சியான காங்கிரசை எதிர்கொண்டது. கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்ததால், பா.ஜ., 17 தொகுதிகள், ம.ஜ.த., இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
லோக்சபா தேர்தல் முடிந்த பின், கூட்டணி முறியும் என, காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி முறியவில்லை; மாறாக வலுவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ம.ஜ.த.,வின் குமாரசாமி இடம் பெற்றுள்ளார். முக்கியமான துறையும் கிடைத்துள்ளது.
இவருக்கு பா.ஜ., மேலிடத்திடம், அதிக முக்கியத்துவம் கிடைப்பதால் ம.ஜ.த.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணி தொடர வேண்டும் என, விரும்புகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களிலும் கூட்டணியாக களமிறங்க பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ் அரசில் வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடா முறைகேடு என, ஒவ்வொரு ஊழலாக அம்பலமாகிறது.
இதை வைத்து, சட்டசபை, மேலவையில் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தின.
வரும் நாட்களில் மூடா முறைகேட்டை கண்டித்து, பெரிய அளவில் போராட்டம் நடத்தும்படி, பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்த போராட்டத்தில், ம.ஜ.த.,வும் கைகோர்க்கும்.