ADDED : ஏப் 12, 2024 05:50 AM

கார்வார்: எல்லாபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரின் மகன் விவேக், காங்கிரசில் இணைந்தார்.
உத்தர கன்னடா எல்லாபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால், பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.,க்களில் இவரும் ஒருவர்.
பா.ஜ.,வில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். ஆனாலும் தன்னை தோல்வி அடைய வைக்க, பா.ஜ., தலைவர்கள் முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார். மீண்டும் காங்கிரசில் இணைய முயற்சி செய்தார்.
துணை முதல்வர் சிவகுமாரையும் சந்தித்து பேசினார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவும் தயார் ஆனார். அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். பா.ஜ.,வில் இருந்து கொண்டே, காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும்படி, சிவகுமார் கூறியதால், பதவியை ராஜினாமா செய்வதை கைவிட்டார். அதன்பின் தனது ஆதரவாளர்களை, காங்கிரசுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், சிவராம் ஹெப்பாரின் மகன் விவேக், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய போவதாக தகவல் வெளியானது. இதுபற்றி சிவராம் ஹெப்பார் எதுவும் கூறாமல் இருந்தார்.
எல்லாபுரா பானவாசியில் நேற்று, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவேக், கர்நாடக காங்கிரஸ் துணைத் தலைவர் ஐவன் டிசோசா முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார்.
உத்தர கன்னடா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும், விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு, சிட்டிங் எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் சிவராம் ஹெப்பார் மகன், காங்கிரசில் இணைந்து இருப்பது, காகேரி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

