ஸ்வாதி பின்னணியில் பா.ஜ., ஆம் ஆத்மி அமைச்சர் புகார்
ஸ்வாதி பின்னணியில் பா.ஜ., ஆம் ஆத்மி அமைச்சர் புகார்
ADDED : மே 17, 2024 08:27 PM
பிபவ் குமார் மீது காவல்துறை எப்.ஐ.ஆர்., பதிவு செய்த ஒரு நாள் கழித்து, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.
செய்தியாளர்களிடம் நேற்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஆதிஷி கூறியதாவது:
முதல்வரை குற்றவாளியாக்குவதற்காக ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பா.ஜ.,வின் சதி. இதற்கு ஸ்வாதி பயன்படுத்தப்படுகிறார்.
முதல்வர் இல்லத்துக்கு அவரை சந்திக்க ஸ்வாதி அனுமதி வாங்காமல் வந்துவிட்டார். முதல்வர் தேர்தல் வேலையில் பிஸியாக இருக்கிறார் என்று அவரிடம் பிபவ் சொன்னார். அதை பொருட்படுத்தாமல், முதல்வர் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். கெஜ்ரிவாலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதே அவரது நோக்கம்.
அவர் கூறும் பொய்யை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தன் புகாரில் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், வலியால் துடித்ததாகவும், சட்டையின் பொத்தான்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வெளிவந்துள்ள ஒரு வீடியோ யதார்த்தத்தை காட்டுகிறது.
மாலிவால் டிராயிங் ரூமில் வசதியாக அமர்ந்திருப்பது, பாதுகாப்பு ஊழியர்களை மிரட்டுவது, அவரது உடைகள் கிழிந்து போகவில்லை என்பதை வீடியோ காட்டுகிறது.
மாலிவால் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
இது பா.ஜ.,வின் சதி என்பதை முழுச் சம்பவமும் நிரூபிக்கிறது. ஸ்வாதி மாலிவால் மீது பிபவ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

