சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரம் விலை ரூ.43 லட்சம்: பாஜ கடும் விமர்சனம்
சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரம் விலை ரூ.43 லட்சம்: பாஜ கடும் விமர்சனம்
ADDED : டிச 03, 2025 07:12 PM

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ.43 லட்சம் ஆகும். அவரின் ஆடம்பர மனநிலையை இது காட்டுகிறது என்று பாஜ கடுமையாக விமர்சித்து உள்ளது.
கர்நாடகா முதல்வர் பதவியை விட்டுத்தரும் விவகாரத்தில் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே கருத்து முரண் எழுந்தது. முதல்வர் பதவிக்காக இருவரும் மோதிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
கட்சி தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் உணவு விருந்தளித்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அப்போது, அவர்கள் சேர்ந்து இருந்தவாறு எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சொந்த கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது எதிர்க்கட்சியினரிடமும் வைரலானது.
அதற்கு முக்கிய காரணம்... இருவரும் தங்கள் கைகளில் அணிந்து இருந்த கைக்கடிகாரமே. அதிக விலை கொண்ட கைக் கடிகாரங்களையும், கர்நாடக அரசியலையும் பிரிக்கவே முடியாது என்று பலரும் விமர்சித்தனர்.
சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் பெயர் சாண்டோஸ் டி கார்டியர்(Santos de Cartier). இதன் விலை ரூ.43 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதே ரக கைக்கடிகாரத்தை துணை முதல்வர் சிவகுமாரும் அணிந்துள்ளார்.
இந்த கைக்கடிகார போட்டோவை தமது எக்ஸ் வலை தள பதிவில் பகிர்ந்துள்ள கர்நாடக பாஜ கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது. வறட்சி மற்றும் சீரழிந்த உட்கட்டமைப்புடன் மாநிலம் போராடிக் கொண்டு இருக்கையில் எளிய சோஷலிச முதல்வராக காட்டிக் கொள்கிறார் சித்தராமையா என்று பாஜ விமர்சித்துள்ளது.
மேலும் அதே பதிவில் 2016ம் ஆண்டு சித்தராமையா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் (ஹப்லட் - Hublot) போட்டோவையும் வெளியிட்டுள்ளது. அப்போது அவர் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை ரூ.70 லட்சம் என்று ஹெச்.டி. குமாரசாமி குறிப்பிட்டதையும் மேற்கோள் காட்டி உள்ளது.
இதுகுறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:
சாமானிய மனிதராக காட்டிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு அவர் அணிந்துள்ள ஆடம்பர கைக்கடிகாரம் பொருந்தவில்லை. இந்த கடிகாரத்தின் விலை 40 லட்சத்து 80 ஆயிரத்து 93 ரூபாய் 63 காசுகள். சிக்கன நடவடிக்கை, ஏழைக்களுக்கு ஆதரவான நிர்வாகம் என்று அடிக்கடி பேசிக் கொள்ளும் இரு தலைவர்களின் இந்த ஆடம்பரம், ராகுலின் பாணியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு பிரதீப் பண்டாரி தமது பதிவில் கூறி உள்ளார்.
பாஜ விமர்சனத்தை தொடர்ந்து, துணை முதல்வர் சிவகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கடிகாரத்தை ஆஸ்திரேலியாவில் வாங்கினேன். அதற்காக எனது கிரெடிட் கார்டு மூலம் ரூ.24 லட்சம் செலுத்தினேன். எனது பரிவர்த்தனையை பார்க்கவும், இது நான் கடினமாக சம்பாதித்த பணம்.
என் தந்தையிடம் ஏழு கைக்கடிகாரங்கள் இருந்தன. அவருக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் மறைவுக்கு பின்னால் அந்த கைக்கடிகாரங்களை நானோ அல்லது எனது சகோதரனோ தானே அணிய வேண்டும்.
சித்தராமையாவின் கடிகாரத்தை பற்றி எனக்கு தெரியாது. ஒரு கைக்கடிகாரத்தை அவர் வைத்திருக்க உரிமை உள்ளது. இதை அவரது மகன் அல்லது மனைவி கொடுத்திருக்கலாம். ஒரு கைக்கடிகாரத்தை வாங்கும் திறன் அவருக்கு உள்ளது.
இவ்வாறு துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

