ஆட்சி முடிய 70 நாட்களே உள்ள நிலையில் இலவச மடிக்கணினிகள் திட்டம் ஏன்; நயினார் நாகேந்திரன் கேள்வி
ஆட்சி முடிய 70 நாட்களே உள்ள நிலையில் இலவச மடிக்கணினிகள் திட்டம் ஏன்; நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : டிச 03, 2025 07:45 PM

சென்னை: ஆட்சி முடிய 70 நாட்களே உள்ள நிலையில் இலவச மடிக்கணினிகள் திட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்தத் துடிப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் எதற்கு இத்தனைப் பாகுபாடுகள். கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2,000 கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.
பல லட்ச மாணவர்கள் உள்ள தமிழகத்தில் வெறும் 10 லட்ச மாணவர்கள் மட்டும் எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்? மேடையில் பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கனவுத் திட்டமாக, 2011 முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இலவச மடிக்கணினி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் ஒழித்துக் கட்டிவிட்டு தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் அத்திட்டத்தைத் தூசி தட்டி எடுத்தால் முதல் தலைமுறையினர் மயங்கி திமுகவிற்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா?
அதுமட்டுமன்றி ஆட்சி முடிய இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில் இத்திட்டத்தை இப்போது அவசர அவசரமாக அமல்படுத்தத் துடிப்பது ஏன்? குடிநீர், கழிவறை, பேராசிரியர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் திமுக அரசின் துரோகத்தை எப்படி மன்னிப்பார்கள்?
அதுவும், ஓராண்டு கால ஆட்சியை வைத்துக் கொண்டு இரண்டு வருடங்களில் 20 லட்ச மாணவர்களுக்கு மடிக்கணினி என்று பட்ஜெட் ஒதுக்கியது ஏன்?
அடுத்த ஆட்சிக்கும் சேர்த்து பட்ஜெட் போடும் அதிகாரத்தைத் திமுகவிற்கு யார் கொடுத்தார்கள்? எப்படியும் அடுத்தமுறை ஆட்சிக்கு வர மாட்டோம் என்று தங்கள் இஷ்டத்திற்கு பட்ஜெட்டை ஒதுக்கி திமுக கொள்ளையடிப்பதற்கு மாணவர்களின் ஆசைகளும் கனவுகளும் பலியாக வேண்டுமா?
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறி உள்ளார்.

