-போலி சி.ஏ.ஜி., அறிக்கை தயாரித்த பா.ஜ., ஆம் ஆத்மி பாய்ச்சல்
-போலி சி.ஏ.ஜி., அறிக்கை தயாரித்த பா.ஜ., ஆம் ஆத்மி பாய்ச்சல்
ADDED : ஜன 11, 2025 08:36 PM
புதுடில்லி:'மத்திய கணக்கு அதிகாரி அறிக்கை குறித்து பா.ஜ., கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லி அரசுக்கு எதிராக பா.ஜ., இட்டுக்கட்டி குற்றம் சாட்டி வருகிறது. சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அக்கட்சியால் தயாரிக்கப்பட்டவை. இதற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது. சி.ஏ.ஜி., அறிக்கையை டில்லி முதல்வர் மற்றும் துணைநிலை கவர்னர் ஆகியோரே இன்னும் பார்க்கவில்லை. மேலும், சி.ஏ.ஜி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மியை பலவீனப்படுத்த பா.ஜ., தலைவர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்படுள்ளது.
இது போலி அறிக்கை. பா.ஜ., இதுபோன்ற செயல்களை செய்வது புதிதல்ல. இதே உத்தியைத்தான் மீண்டும் மீண்டும் பா.ஜ., கையாண்டு வருகிறது. தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்ப நினைக்கிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கூற்றுக்கள் அடிப்படையில் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றமே நிராகரித்து விட்டது.
மத்திய பா.ஜ., அரசால் கட்டப்பட்ட துவாரகா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு 7.5 கோடி ரூபாய் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கும் போது 705 கோடி ரூபாய் செலவாகி இருந்தது.
இதுபோன்ற ஊழல்களை செய்து விட்டு, அதை மக்களிடம் இருந்து மறைக்க எதிர்க்கட்சிகள் மீது போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்குவது பா.ஜ.,வின் வழக்கம்.
அதேபோல, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வாயிலாக பா.ஜ., தலைவர்கள் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையால் அரசுக்கு 2026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என பா.ஜ., குற்றம் சாட்டியிருந்தது.

