மருத்துவ கல்லுாரியில் ரூ.800 கோடி முறைகேடு காங்., வேட்பாளர் மீது பா.ஜ., குற்றச்சாட்டு
மருத்துவ கல்லுாரியில் ரூ.800 கோடி முறைகேடு காங்., வேட்பாளர் மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : மே 07, 2024 06:28 AM

பெங்களூரு: ''அம்பேத்கர் மருத்துவ கல்லுாரியில், சீட் வழங்கியதில் 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில் கலபுரகி காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டமணிக்கு தொடர்புள்ளது,'' என பெங்களூரு தெற்கு பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகனும், கலபுரகி காங்கிரஸ் வேட்பாளருமான ராதாகிருஷ்ண தொட்டமணி, அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி மற்றும் அம்பேத்கர் பல் மருத்துவ கல்லுாரியின் நிர்வாக தலைவராக பதவி வகிக்கிறார். கல்லுாரியில் மாணவர்களுக்கு சீட் வழங்குவதில், 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
பெரிய ஊழல்
முறைகேட்டில் தொடர்புள்ள ராதா கிருஷ்ண தொட்டமணி, குரப்பாஜி, மஹாதேவ பிரசாத், முரளி மோகன், குபேர், அமானுல்லா கான் மீது, லோக் ஆயுக்தாவிலும், சிஐ.டி.,யிலும் புகார் அளித்துள்ளேன். மாநிலத்தின் மருத்துவ கல்லுாரிகள், பல் மருத்துவ கல்லுாரிகளின் வரலாற்றிலேயே, மிக பெரிய ஊழல் இதுவாகும்.
இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,யில் தேர்ச்சி பெறாத, நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பணக்கார குடும்பங்களின் மாணவர்களிடம், டொனேஷன் என்ற பெயரில், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்று, போலியான மதிப்பெண் பட்டியல் தயாரித்து, மருத்துவ கல்லுாரியில் சீட் வழங்கியுள்ளனர்.
தேர்வில் தேர்ச்சி பெறாத பணக்கார மாணவர்களுக்கு, ஜார்கண்ட் மாநிலத்தின் அனாமிகா கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வுகளில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை போன்ற ஆவணங்களை உருவாக்கினர். இவர்களுக்கு சட்டவிரோதமாக அம்பேத்கர் மருத்துவ கல்லுாரியில், சீட் கொடுத்து உள்ளனர்.
குறைந்த கட்டணம்
முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் குண்டுராவ், அன்றைய மத்திய அமைச்சர் சங்கரானந்தா, மாநில அமைச்சர்களாக இருந்த பசவலிங்கப்பா, ராச்சையா, மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்களில், 1980 - 81ல் துவங்கப்பட்ட ஆனந்த் சோஷியல் மற்றும் எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வகிப்பில் அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி, அம்பேத்கர் பல் மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன.
ராதா கிருஷ்ணா தொட்டமணி, இந்த மருத்துவமனைகளின் தலைவராக நியமிக்கப்பட்ட பின், பெருமளவில் ஊழல் நடக்கிறது. பொருளாதாரம், கல்வியில் பின தங்கிய எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளின் ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், மருத்துவ கல்வி வழங்கும் நோக்கில், இந்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
முதல்வருக்கு கடிதம்
இதற்கு முன் சிவசாமி, மோகன், சிவலிங்கையா நிர்வாகிகளாக இருந்த போது, மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டன. இவர்களுக்கு பின் ராதாகிருஷ்ண தொட்டமணி, மஹாதேவ பிரசாத், முரளி மோகன் நிர்வாகிகளான பின், முறைகேடு நடக்கிறது.
செல்வாக்கு மிக்க இவர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தங்களுக்கு தேவையான படி மாற்றி, முறைகேடு செய்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி, முதல்வர் சித்தாரமையாவுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.