முதல்வர் அலுவலக 'எக்ஸ்' கணக்கு குழப்பம் விளைவிப்பதாக பா.ஜ., புகார்
முதல்வர் அலுவலக 'எக்ஸ்' கணக்கு குழப்பம் விளைவிப்பதாக பா.ஜ., புகார்
ADDED : பிப் 14, 2025 11:13 PM
சாணக்யாபுரி:முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' கணக்கின் பெயரை மாற்றி, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்துவதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக டில்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.,விடம் ஆட்சியை அக்கட்சி பறிகொடுத்தது.
இதனால் பல்வேறு குளறுபடிகளை ஆம் ஆத்மி செய்து வருவதாக பா.ஜ., புகார் செய்து வருகிறது.
பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று கூறியதாவது:
'CMO Delhi' என்ற முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ என்ற 'எக்ஸ்' கணக்கை, முன்னாள் முதல்வரின் உத்தரவின்பேரில், 'அரவிந்த் கெஜ்ரிவால் அட் வொர்க்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையிடமிருந்து அறிக்கையை கேட்டு பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன் ஊழல் நிறைந்த அரசு கவிழ்ந்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒரு டிஜிட்டல் கொள்ளையராக மாறிவிட்டார் என்று சொல்வது மிகையாகாது.
பொது நிதியை தன் சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரியின் பெயரை மறுபெயரிட்டது, கண்டிக்கத்தக்கது.
'CMO Delhi' என்ற முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' கணக்கை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இந்த டிஜிட்டல் கொள்ளையால், அரசாங்க வளங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், மக்களின் தனிப்பட்ட தகவல்களையும் சுரண்ட நினைக்கிறார். இதற்காக அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை வெளியே வரும்!
அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய உண்மை விரைவில் வெளியே வரும். டில்லி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இருந்து சட்டசபை கூட்டத் தொடர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளின் பழைய வீடியோக்களை ஆம் ஆத்மி நீக்கி வருகிறது. இதன் மூலம் தன் தோல்விகளை மறைக்க அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பயனற்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மை பற்றிப் பேசிய அதே கெஜ்ரிவால், இன்று தன் பொய்கள் மற்றும் தோல்விகள் வெளிப்படும் என்ற பயத்தில் அரசாங்க டிஜிட்டல் ஆவணங்களை நீக்கி வருகிறார்.
விஜேந்தர் குப்தா,
பா.ஜ., - எம்.எல்.ஏ.,

