விற்பனைக்கு வந்ததா எம்எல்ஏ சீட்; விரட்டி விரட்டி தாக்கிய தொண்டர்கள்
விற்பனைக்கு வந்ததா எம்எல்ஏ சீட்; விரட்டி விரட்டி தாக்கிய தொண்டர்கள்
ADDED : அக் 19, 2025 07:41 AM

இந்தியா முழுவதும் ஆவலோடு நோக்கும் தேர்தல் பீஹார் சட்டசபை தேர்தல். 243 தொகுதிகளைக் கொண்ட பீஹாரில் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற உள்ளது; 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. பா.ஜ., தற்போது ஆட்சியில் உள்ள நிதிஷ் குமார் கூட்டணியும், 'இண்டி' கூட்டணியும் மோதுகின்றன.
காங்கிரஸ் கட்சி, 48 தொகுதிகளுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஆனால், இது கட்சிக்குள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சீனியர் தலை வர்களுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியிலிருந்து திரும்பிய பீஹார் காங்., தலைவர்களை, தொண்டர்கள் விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். 'பணம் வாங்கிக் கொண்டு, 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது' என, தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு தொகுதிக்கு கிட்டத் தட்ட, 5 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதாம். இதனால்,காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்படும் என, சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கட்சியினர், ராகுல் மீது கடுப்பில் உள்ளனர்.
மற்ற கட்சிகள் அனைத்தும் பீஹார் தேர்தல் விஷயத்தில் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்க, ராகுல் வெளிநாடு சென்றுவிட்டார். 'தேர்தல் என்றாலே ஏன் ராகுல் ஓடிவிடுகிறார்?' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.
'நவ., 7ம் தேதி டில்லி திரும்பும் ராகுல், பீஹார் தேர்தல் விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டு, விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார்' என்கிறது காங்கிரஸ். 'சீட்' வேண்டுமானால் காசு வைக்க வேண்டும் என்கிற இந்த லஞ்ச விவகாரம், காங்கிரசில் மட்டுமன்றி மற்ற கட்சி களிலும் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்.