பீதரில் லிங்காயத் ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ., காங்கிரஸ்
பீதரில் லிங்காயத் ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ., காங்கிரஸ்
ADDED : மே 02, 2024 06:30 AM

பீதர் தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் லிங்காயத் ஓட்டுகளுக்கு குறி வைத்துள்ளன. இந்த சமுதாயத்தினரை ஈர்க்க, இரண்டு கட்சிகளுமே முயற்சிக்கின்றன.
கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல், மே 7ல் நடக்கவுள்ளது. இதில் பீதர் தொகுதியும் ஒன்று. இங்கு பா.ஜ., வேட்பாளராக பகவந்த் கூபா, காங்கிரஸ் சார்பில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் கன்ட்ரே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தொகுதியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.,வும், தட்டிப்பறிக்க காங்கிரசும் முயற்சிக்கின்றன.
வெற்றி திட்டங்கள்
இரண்டு கட்சிகளும், வேட்பாளர்களின் வெற்றிக்காக திட்டங்கள் வகுக்கின்றன. குறிப்பாக லிங்காயத் ஓட்டுகளை பெற முயற்சிக்கின்றன. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் எம்.பி.பாட்டீல், சமீபத்தில் லிங்காயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இவரை தொடர்ந்து மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும் கூட்டம் நடத்தினார். பகவந்த்கூபாவுக்கு ஆதரவாக எடியூரப்பாவும், விஜயேந்திராவும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
பீதர் தொகுதியில் லிங்காயத் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வேட்பாளர்களின் வெற்றியில், இந்த சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகம். எனவே, இவர்கள் ஓட்டுகளில் இரண்டு கட்சிகளும் குறிவைத்துள்ளன.
அக்னிபரிட்சை
தொகுதியை கைப்பற்றுவது விஜயேந்திராவுக்கும், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கும் 'இமேஜ்' பிரச்னையாக உள்ளது. மாநில பா.ஜ., தலைவரான பின் விஜயேந்திரா சந்திக்கும் முதல் அக்னி பரீட்சை இந்த லோக்சபா தேர்தல். ஒவ்வொரு தொகுதிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். பீதர் தற்போது பா.ஜ., வசம் உள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ள விஜயேந்திரா முயற்சிக்கிறார். அதே போன்று, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கும், தன் மகனை வெற்றி பெற வைப்பது அக்னி பரீட்சை தான்.
இந்த தேர்தல் இவரது மகனின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதுமட்டுமின்றி சாகர் கன்ட்ரே வெற்றி பெறாவிட்டால், அமைச்சர் பதவியை ஈஸ்வர் கன்ட்ரே இழக்க நேரிடலாம்
.
- நமது நிருபர் -

