அமைச்சர் லட்சுமிக்கு 1 கிலோ நகை இடஒதுக்கீடுக்கு பா.ஜ., மாஜி நிபந்தனை
அமைச்சர் லட்சுமிக்கு 1 கிலோ நகை இடஒதுக்கீடுக்கு பா.ஜ., மாஜி நிபந்தனை
ADDED : ஏப் 09, 2024 06:12 AM

பெலகாவி: ''அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர் இல்லை. ஓட்டு வாங்க பொய் சொல்கிறார். இச்சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வாங்கி கொடுத்தால், அவருக்கு, 1 கிலோ தங்க நகைகள் பரிசாக கொடுக்கிறோம்,'' என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி சவால் விடுத்து உள்ளார்.
கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவர் லிங்காயத் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
சென்னம்மா ரத்தம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின் போது, 'எனது உடலில் ஓடுவது பஞ்சமசாலி, கிட்டூர் ராணி சென்னம்மா ரத்தம்' என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி, பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
சுதந்திர போராட்ட வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய, துணிச்சலான பெண். லட்சுமி ஹெப்பால்கர், இப்போது தான் அமைச்சராகி உள்ளார். கிட்டூர் ராணி சென்னம்மாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசுவதை, அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு முன்பு அவர், பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர். அவரது கணவர் ரவீந்திரா, லிங்காயத்தின் பனாஜிகா சமூகத்தை சேர்ந்தவர். இதனால் லட்சுமி ஹெப்பால்கரும் பனாஜிகா தான். பெலகாவியில் பஞ்சமசாலி சமூகத்தினர் ஓட்டுகளை பெற, தன்னை பஞ்சமசாலி என்று பொய் கூறுகிறார்.
ராஜினாமா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகிறது. இதுவரை பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வாங்கி தராதது ஏன். லட்சுமி ஹெப்பால்கர் உண்மையிலேயே பஞ்சமசாலி என்றால், முதல்வர் சித்தராமையாவிடம் சென்று, '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு இருப்பார். அவர் முதலில், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கிடைத்தால் மீண்டும் அமைச்சரவையில் சேர்ந்து கொள்ளட்டும்.
பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வாங்கி கொடுத்தால், லட்சுமி ஹெப்பால்கருக்கு, ஒரு கிலோ தங்க நகைகள் பரிசாக கொடுக்கிறோம்.
ஜெகதீஷ் ஷெட்டர் வெளிமாவட்டத்துக்காரர் என்று விமர்சிக்கும் லட்சுமி ஹெப்பால்கரும், பெலகாவிகாரர் இல்லை. அவர் கித்துாரை சேர்ந்தவர். அந்த தொகுதி, உத்தர கன்னடாவின் கீழ் வருகிறது.
அவர் பெலகாவி ரூரலில் போட்டியிடும் போது, ஜெகதீஷ் ஷெட்டர் இங்கு போட்டியிட கூடாதா. சோனியா கூட கர்நாடகாவில் போட்டியிட்டார். நமது நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் யாரும் போட்டியிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

