டில்லியில் பா.ஜ., 'ஹாட்ரிக்' சாதனை: எடுபடாத ஆம் ஆத்மி அனுதாப அலை
டில்லியில் பா.ஜ., 'ஹாட்ரிக்' சாதனை: எடுபடாத ஆம் ஆத்மி அனுதாப அலை
ADDED : ஜூன் 05, 2024 02:50 AM

புதுடில்லி: டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும், பா.ஜ., மீண்டும் கைப்பற்றி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளது.
தலைநகர் டில்லியில், மொத்தம் ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமான டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. 2014 - 2019 லோக்சபா தேர்தலில், இங்குள்ள ஏழு தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க, எலியும், பூனையுமாக இருந்த ஆம் ஆத்மி - காங்., கூட்டணி வைத்தன. இதன்படி, ஏழு தொகுதிகளில் ஆம் ஆத்மி, மூன்றில் காங்., போட்டியிட்டன.
காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என, அறைகூவல் விடுத்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வை வீழ்த்த வேறு வழியில்லாமல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.
இதேபோல, முதல் முறையாக, காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர், இந்த லோக்சபா தேர்தலில், தங்களது 'கை' சின்னத்துக்கு பதில், ஆம் ஆத்மியின் துடைப்பம் சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். காரணம், அவர்கள் வசிக்கும் இடம், ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியின் கீழ் வருகிறது.
இதற்கிடையே, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின், மதுபானக் கொள்கையில் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
'தேர்தலில் பிரசாரம் செய்வதைத் தடுக்கவே, மத்திய பா.ஜ., அரசு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது' என, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
தொடர்ந்து, 'கெஜ்ரிவாலின் உடல் எடை குறைந்துள்ளது; அவர் மெலிந்து காணப்படுகிறார்' என்றெல்லாம் கூறி, தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டது. இதில், முதல் முறையாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று அனுதாப ஓட்டுகளை பெற முயன்றார். ஆனால் தேர்தல் முடிவுகளில் எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஐம்பது நாட்களுக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்ததை அடுத்து, தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, மே 10ல் வெளியே வந்தார். டில்லியின் மூலைமுடுக்கிலெல்லாம் பிரசாரம் செய்த அவர், தான் சிறையில் அனுபவித்த நிகழ்வுகளை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், டில்லியின் ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., அபார வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இது, காங்., - ஆம் ஆத்மி கூட்டணியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சட்டசபை என்றால் ஆம் ஆத்மிக்கும், லோக்சபா என்றால் பா.ஜ.,வுக்கும் டில்லி வாக்காளர்கள் ஓட்டளிப்பது, தொடர்கதையாகி வருகிறது.
டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும், பா.ஜ., மீண்டும் கைப்பற்றி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றதை கொண்டாடிய அக்கட்சி தொண்டர்கள்.