டில்லியில் போராட்டம் நடத்தியதால் சித்தராமையா மீது பா.ஜ.,வுக்கு கோபம்
டில்லியில் போராட்டம் நடத்தியதால் சித்தராமையா மீது பா.ஜ.,வுக்கு கோபம்
ADDED : ஆக 03, 2024 11:26 PM

பெலகாவி: ''வரி பங்கீட்டில் கர்நாடகாவுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்தியதால், முதல்வர் சித்தராமையா மீது பா.ஜ.,வுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது,'' என, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெலகாவியில் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அநீதி செய்யும் போதெல்லாம், முதல் ஆளாக குரல் எழுப்பியவர் முதல்வர் சித்தராமையா.
வரி பங்கீட்டில் நமக்கு நடந்த அநீதிக்கு எதிராக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் சென்று, சித்தராமையா போராட்டம் நடத்தினார்.
உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. முதல்வரின் துணிச்சலான நடவடிக்கையை பார்த்து, பா.ஜ.,வுக்கு பயம் வந்துவிட்டது.
இதனால் அவர் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. அவரது குரலை ஒடுக்கவும் முயற்சி நடக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக சித்தராமையா உள்ளார். இதை வெறுப்பு அரசியல் செய்யும் பா.ஜ.,வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலில், முதல்வரை சிக்கவைக்க மத்திய அரசு முயற்சி செய்தது.
சி.ஐ.டி., விசாரணை நடக்கும் நிலையில், சி.பி.ஐ., தேவையின்றி வந்தது. தற்போது அமலாக்கத்துறையும் மூக்கை நுழைத்துள்ளது.
'மூடா' முறைகேட்டில் முதல்வர் மீது எந்த தவறும் இல்லை. பா.ஜ., ஆட்சியில் தான் 'மூடா' நில ஒதுக்கீட்டில் 50க்கு 50க்கு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 'மூடா'விடம் இருந்து நிலம் பெற்றுள்ளனர். இதனால் பாதயாத்திரையில் இருந்து முதலில் விலகினர். ஆனால் பா.ஜ., மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் கலந்து கொண்டு உள்ளனர். 'மூடா' முறைகேடு பா.ஜ., ஆட்சியில் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.