-ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது பா.ஜ., குற்றப்பத்திரிகை வெளியீடு
-ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது பா.ஜ., குற்றப்பத்திரிகை வெளியீடு
ADDED : டிச 10, 2024 10:29 PM
புதுடில்லி,:ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்.எல்.ஏ.,க்கள் மீது பா.ஜ., குற்றப் பத்திரிகை வெளி யிட்டுள்ளது.
டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜேந்தர் குப்தா நேற்று கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி 20 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் 18 பேருக்கு இடமில்லை. - முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிர்லா ஆகியோருக்கு மட்டுமே வேறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றப் பத்திரிகையை பா.ஜ., வெளியிடும். அந்த எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மக்களிடம் இந்தக் குற்றப் பத்திரிகையை வினியோகம் செய்வோம்.
மடிபூர், புராரி, மாடல் டவுன், முண்ட்கா, கல்காஜி, கோகுல்பூர், மாளவியா நகர், ஆர்.கே.புரம், மோதி நகர் மற்றும் நரேலா ஆகிய தொகுதிகளிம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றப்பத்திரிகை ஏற்கனவே மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
டில்லி அரசு நிதிச்சுமையால் தடுமாறும் நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சொத்துக்களை குவித்துள்ளனர். முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பங்களாவை அரண்மனை போல மாற்றியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய தற்போதைய எம்.எல்.ஏ.,களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாத நிலையில் தவிக்கிறது. அந்த எம்.எல்.ஏ.,க்களின் செயலற்ற தன்மையால் தொகுதி மக்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. இதுதான் உண்மையான நிலவரம்.
கல்விப் புரட்சியின் தந்தை எனக் கூறிக்கொள்ளும் மணீஷ் சிசோடியா, பட்பர்கஞ்ச் தொகுதியை விட்டு ஜங்புரா தொகுதிக்கு ஏன் மாற வேண்டும்?
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் இதுவரை 31 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ள ஆம் ஆத்மி, ஒரு தொகுதியில் கூட சிட்டிங் எம்.எல்.ஏ.,வை அறிவிக்கவில்லை.
இதுவே, அந்தக் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதை உறுதிபடுத்துகிறது. வாக்காளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் ஆம் ஆத்மி தவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.