சட்டசபை தேர்தலில் 70ஐயும் கைப்பற்றுவோம் பா.ஜ., தலைவர் நம்பிக்கை
சட்டசபை தேர்தலில் 70ஐயும் கைப்பற்றுவோம் பா.ஜ., தலைவர் நம்பிக்கை
ADDED : ஜூலை 06, 2024 10:15 PM

புதுடில்லி:“தலைநகர் டில்லியில் 7 லோக்சபா தொகுதிகளையும் தக்க வைத்துக் கொண்டதால், டில்லி சட்டசபைக்கு அடுத்த அண்டு நடக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி அரசை அகற்ற வேண்டும் என்ற உத்வேகம், பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் இரட்டிப்பாகியுள்ளது,” என, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளார்.
பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி 123-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. டில்லி மாநில பா.ஜ., அலுவலகத்தில், முகர்ஜி படத்துக்கு வீரேந்திர சச்தேவா மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், சச்தேவா கூறியதாவது:
இன்றும் நடக்கும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
எழுபது எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபையில் இப்போது பா.ஜ.வுக்கு வெறும் 8 பேர்தான் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி கட்சி 61 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ளது.
டில்லி மாநகர வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசு என்ற இரட்டை இயந்திரம் தேவை. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் டில்லியின் ஏழு தொகுதிகளையும் பா.ஜ., தக்க வைத்துக் கொண்டது. அதேபோல, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகம், பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் இரட்டிப்பாகியுள்ளது. தேர்தல் பணிகள் விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.