ADDED : மார் 22, 2024 05:54 AM

யாத்கிர்: ''லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கும் விஷயத்தில், பா.ஜ., தலைவர்கள் எங்களை அவமதிக்கின்றனர்,'' என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரண்கவுடா கந்தகூர் பகீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
யாத்கிர் குர்மித்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரண்கவுடா கந்தகூர், 43. ஒரு காலத்தில் தேவகவுடா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்தார். கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டு போடும் முடிவில் இருந்தார்.
கடைசி நேரத்தில் குமாரசாமி சமாதானப்படுத்தியதால், ம.ஜ.த., வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். அதன்பின்னரும் கட்சியுடன் நெருக்கம் காட்டவில்லை.
குர்மித்கல்லில் நேற்று சரண்கவுடா கந்தகூர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,வுடன், எங்கள் கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. கலபுரகி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு எனது தொகுதி வருகிறது. கலபுரகி பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ், இதுவரை என்னிடம் பேசவே இல்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஆனால் பா.ஜ., தலைவர்கள் எங்களை அவமதிக்கின்றனர்.
கூட்டணி வைத்த பின்னர் ஆறு, ஏழு முறை குமாரசாமி டில்லி சென்று வந்துவிட்டார். இதுவரை தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. இரண்டு முதல் மூன்று இடங்களை, பா.ஜ.,விடம் வாங்குவதாக இருந்தால், கூட்டணியே அமைத்திருக்க கூடாது.
தொகுதி பங்கீடு விஷயத்திலும் அவமதிப்பு நடக்கிறது. பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு பிரசாரம் வந்த போது, பெயருக்கு கூட எங்கள் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை. பா.ஜ.,கூட்டணி வேண்டுமா என்று, எனது ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு பின்னர் எனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்துவேன். அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதன்படி செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

